மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களால் கவிழ்ந்துள்ளது. பல மாதங்கள் திட்டமிட்டு சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி பா.ஜ.க சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்திருக்கிறது. நேற்று உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று தேவேந்திர பட்னாவிஸ், அதிருப்தி கோஷ்டி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். உடனே ஆளுநரும் அனுமதி கொடுத்தார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வெளியில்வந்த தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார் என்று தெரிவித்தார். அதோடு அமைச்சரவையில்தான் இடம்பெறமாட்டேன் என்றும், அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
பட்னாவிஸின் இந்தக் கருத்து பா.ஜ.க தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா அளித்தப் பேட்டியில், “பட்னாவிஸ் கட்டாயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அந்தக் கோரிக்கையை பெரிய மனதுடன் பட்னாவிஸ் ஏற்றுக்கொண்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்னர் தெரிவித்தார். முதல்வராகப் பதவியேற்பார் என்று தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தவுடன், ஏக்நாத் ஷிண்டே கோவாவிலிருக்கும் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் வீடியோ காலில் பேசினார். இன்று மாலை 7:30 மணிக்கு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பட்னாவிஸ் மாநில உள்துறை அமைச்சராக இருப்பார் என்று கூறப்படுகிறது. அமைச்சரவை பின்னர் விரிவுபடுத்தப்படும்.
இளம் வயதில் சதாரா மாவட்டத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பை வந்த ஏக்நாத் ஷிண்டே ஆரம்ப நாள்களில் ஆட்டோ ஓட்டினார். பின்னர் சிவசேனாவில் இணைத்துக்கொண்டு தானேயில் கட்சியை வளர்த்தார். 1997-ம் ஆண்டு முதன்முறையாக தானே மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, அதன் பிறகு மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகே வழிகாட்டுதலில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு 2004-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்றத்துக்குச் சென்றார். தொடர்ச்சியாக 4 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
ஏக்நாத் ஷிண்டேவை பா.ஜ.க முதல்வராக்கி இருப்பதன் மூலம் சிவசேனாவை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாகக் கருதப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராகியிருப்பதால் ஒட்டுமொத்த சிவசேனாவையும் ஏக்நாத் ஷிண்டேவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர பா.ஜ.க உதவும் என்று தெரிகிறது. இதனால் சிவசேனாவை தக்கவைத்துக்கொள்ள உத்தவ் தாக்கரே கடுமையான சட்டப்போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.