மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்க உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸை, மும்பையில் உள்ள அவரது வீட்டில், ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து, மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க, ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்த தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே, தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் கூடிய கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமைக் கோரினர்.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, இன்று இரவு 7:30 மணிக்கு, ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பார். இதைத் தொடர்ந்து அமைச்சரவை பதவி ஏற்கும். பாஜக மற்றும் சிவசேனா எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவி ஏற்பார்கள். நான், அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, முதலமைச்சராக மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்பார் என்றும், துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பார் என்றும் தகவல் வெளியாகிய நிலையில், முதலமைச்சர் பதவி, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்துள்ளது.