சென்னை: ”மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை” என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கலை சில நாட்கள் முன் செய்தவர், இப்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று சென்னை வந்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, “இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தும், இந்த கூட்டத்தின் மூலம், நமக்கு ஆதரவளிக்கக்கூடிய மற்ற அரசியல் கட்சியினரையும் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எனது நன்றி. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏறக்குறைய நமக்கு இங்குள்ள கட்சியினரிடம் 63 ஆயிரம் ஓட்டுகள் உள்ளதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஒரு மாநில அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. பாஜக, மகாராஷ்டிராவில் சிவசேனா எதிர்ப்பு எம்எல்ஏக்களுக்கு ஆதரவளிக்கப் போகிறது. பாஜகவின் தலைவர் அங்கு மாநில முதல்வராக வரவில்லை. ஏனென்றால், இந்த அரசு தோற்காது என்று அவருக்கு தெரியும்.
எனவே அவர்கள் பலி ஆடுகளை கண்டுபிடித்து, அதன்மூலம் ஆட்சியை பிடிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் எதை காட்டுகின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்தின் மேல் துளியும் மரியாதை இல்லை என்பதையே காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு சாராம்சத்தையும் அவர்கள் மீறியும், உடைத்தெறிந்தும் வருகின்றனர். அதனை வெட்கமே இல்லாமல் செய்கின்றனர். அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்திய குடியரசுத் தலைவரின் கீழ் செயல்படுகிற மாநிலத்தின் பிரதிநிதிகளே ஆளுநர்கள். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் எவ்வாறு வரம்புமீறி செயல்படுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இந்த மாநிலத்தின் ஆளுநரும் அவ்வாறே செயல்படுகிறவராக இருக்கிறார்.
இந்திய அரசியல் அமைப்பின் எல்லா சாராம்சங்களும், சட்டத்தை முன்னிறுத்தும் இந்த மக்களாளேயே மீறப்படுகின்றன. மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவரின் பேச்சினை நான் கவனித்தேன். அவர் இந்துத்துவாவைப் பற்றியே தொடர்ந்து பேசினார். இந்த அரசுக்கு இந்துத்துவாவின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் இந்த அரசை நாங்கள் வீழ்த்தினோம் என்கிறார்.
இது எதனை காட்டுகிறது. இந்துத்துவாவின் மீது நம்பிக்கை இல்லாத, இந்திய அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற, மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை என்பதையே காட்டுகின்றது. எனவே தான் இந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் எனக்கு உங்களின் ஆதரவு தேவைப்படுகின்றது” என்றவர், “பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அது சாத்தியமாகவில்லை” தெரிவித்தார்.