மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி சார்பில் புதிய முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே பதவியேற்க உள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஏக்நாத் சிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் 39 பேரும் அறிவித்தனர்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியனார்.
இந்நிலையில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனாவின் ஏக்நாத் சிண்டே ஆகியோர் மும்பையில் ஆளுநர் பகத்சிங் கோசியாரியை முறைப்படி சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.
தங்களுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினர். இதையடுத்து ஆட்சியமைக்கும்படி இருவரிடமும் கேட்டுக்கொண்ட ஆளுநர், இனிப்பு ஊட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், 2019 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க மக்கள் வாக்களித்ததாகவும், அதற்கு மாறாக இந்துத்துவத்துக்கு எதிரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து உத்தவ் தாக்கரே ஆட்சியமைத்ததாகவும் தெரிவித்தார்.
தாவூத் இப்ராகிமை எதிர்த்த சிவசேனா, தாவூத்துக்கு உதவியவரைத் தனது அரசில் அமைச்சராகக் கொண்டிருந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாஜக – சிவசேனா கூட்டணி அரசின் முதலமைச்சராக ஏக்நாத் சிண்டே மாலை ஏழரை மணிக்குப் பதவியேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.
பதவியேற்றபின் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றும், கூட்டணி அரசில் தான் அமைச்சராக இடம்பெறப் போவதில்லை என்றும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.