கிராமங்களில் மழை பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு திருமணம் செய்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்நிலையில், அரப்பனஹள்ளி நகரில் கழுதைகள் திருமணம் நடந்தது. திருமணத்தின் பின்னர் பெய்த மழை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல பாதிப்புகளை சந்தித்தது. தொடர்ந்து கர்நாடகத்தில் பல பகுதிகளில் கன மழை சில சேதங்களை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக வட கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், விஜயநகர் மாவட்டத்தில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.
இதனால் மழை வேண்டி அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி கிராமத்தை சேர்ந்த மக்கள் நேற்று 2 கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 2 கழுதைகளுக்கும் மாலை அணியப்பட்டு இருந்தது. மஞ்சள், குங்குமம் வைக்கப்பட்டது. புத்தாடை அணியப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் கழுதைகளை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது திடீரென கிராமத்தில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.