மாகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி: ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரியாவிடம் அவர் சமர்பித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

மகாராஷ்டிர மாநில அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. ஆளும் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பாஜக ஆட்சியமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளைக்குள் நிரூபிக்குமாறு மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க மகாராஷ்டிரா ஆளுநர், உத்தவ் தாக்ரே அரசுக்கு உத்தரவிட்டிருந்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியையும், சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் பிகத் சிங் கோஷியாரியாவிடம் உத்தவ் தாக்கரே சமர்பித்துள்ளார்.

சிவசேனா தொண்டர்கள் யாரும் தனது முடிவுக்காக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ள உத்தவ் தாக்கரே, இரண்டரை ஆண்டுகள் ஆட்சியில் திருப்திகரமாக இருந்ததாகவும், பால்தாக்கரேவின் கனவை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரேவின் ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஏற்கும் பட்சத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை எனவும், புதிய அரசு அமைக்க முன்வரும் நபர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் போதும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.