வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பற்றிய கியூ.எஸ்., தரவரிசை பட்டியலில், மும்பை, பெங்களூரு, சென்னை, புதுடில்லி ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த கியூ.எஸ்., எனப்படும் குவாக்குவாரளி சைமண்ட்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஆய்வு செய்து, சிறந்த பல்கலைக்கழகங்கள், சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
நான்கு நகரங்கள்
இந்த ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலை, கியூ.எஸ்., நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 140 நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்தப் பட்டியலில், இந்தியாவின் நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை, 103வது இடத்தையும், கர்நாடக தலைநகர் பெங்களூரு, 114வது இடத்தையும், சென்னை, 125வது இடத்தையும், புதுடில்லி, 129வது இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு மும்பை, பெங்களூரு நகரங்கள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன.
நடவடிக்கை
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பிரிட்டன் தலைநகர் லண்டன் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை தென் கொரியா தலைநகர் சியோல் பிடித்துள்ளது. இந்தியாவில் 2018 – 19ல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 427 மாணவர்கள் தான், உயர் கல்வி படிக்கின்றனர். இதை, 2023ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Advertisement