முடிவுக்கு வருகிறதா தாக்கரே வாரிசு அரசியல்: இனி சிவசேனாவின் எதிர்காலம் என்ன?

சிவசேனா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 38 எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே நேற்று இரவு விலகினார். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேர்ந்த பாஜக கூட்டணி அரசு அமையவுள்ளது.

பால் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே: பழைய படம்

உத்தவ் தாக்கரே தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டார். அதாவது தற்போதைக்கு அவர் சட்டப்பேரவைக்குள் வரப்போவதில்லை. அப்படியானால் தங்களை முதுகில் குத்தி விட்டதாக கூறிய உத்தவ் தாக்கரே எதிர்க்கட்சி தலைவராக தீவிர அரசியல் செய்ய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

அடுத்த தலைவர் ஆதித்ய தாக்கரே?

இதனால் அவரது மகனும் சிவசேனா கட்சியின் அடுத்த தலைமுறை தலைவருமான ஆதித்ய தாக்கரே பக்கம் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. கட்சியின் இளைஞரணி தலைவராக தற்போதுள்ள ஆதித்ய தாக்கரே சட்டப்பேரவையில் சிவசேனா கட்சியின் பலம் குறைந்துவிட்ட போதிலும், வொர்லியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் அவர் ஆக்ரோஷமான, பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக செயலாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கட்சியை வழிநடத்தும் பொறுப்பும் அவருக்கு உள்ளது. இது அவருக்கு அக்னி பரீட்சையாக இருக்கும். 32 வயதான ஆதித்ய தாக்கரே குடும்பத்தில் 3-ம் தலைமுறை தலைவர். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வெற்றி பெற்ற முதல் குடும்ப உறுப்பினர்.

அவரது தாத்தா பால் தாக்கரே சிவசேனா தலைவராக இருந்தபோதிலும் எந்த தேர்தலிலும் போட்டியிட்டு பதவி எதையும் வகிக்கவில்லை. தந்தை உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி வகித்தபோதிலும் மக்களை சந்திக்காமல் சட்டமேலவை உறுப்பினராக மட்டுமே இருந்தார். அதையும் தற்போது ராஜினாமா செய்து விட்டார்.

சிவசேனாவின் முக்கிய வாக்காளர், மாநில மக்கள், மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் கட்சித் தொண்டர்களை வழிநடத்த ஆதித்ய தாக்கரேவுக்கு வாய்ப்புண்டு. ஆனால் அவர் மும்பை போன்ற நகரத்தில் வசிக்கும் பல தரப்பட்ட மொழி பேசும் வாக்காளர்கள், மராத்தி அல்லாத வாக்காளர் தளத்தை சிவசேனா இழக்க நேரிடும்.

பின்னோக்கிப் பார்த்தால், உத்தவ் மற்றும் ஆதித்யா இருவரும் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்தது தவறு என்று பலரும் கூறுகின்றனர். சிவசேனாவின் பலம் கட்சி அமைப்பு தான். அதற்கு ஒரு அமைப்பாளர் தேவை. ஆனால் அதற்கு பதிலாக முதல்வர் மற்றும் அமைச்சர் பதவியில் தந்தையும் மகனும் அமர்ந்ததால் கட்சி அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து சென்று விட்டது.

ஆதித்ய தாக்கரே தனது கட்சியின் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்கு அவரே தலைமையேற்று முன்னேரே வேண்டும் என கட்சியின் தொண்டர்களும், தாக்கரே குடும்ப விசுவாசிகளும் விரும்புகின்றனர். அடிமட்டத்தில் இருந்து அமைப்பை உருவாக்க ஆதித்யாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக சிவசேனா மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

விவசாய தொழிலாளர்கள், குறு விவசாயிகள், அமைப்புசாராத் துறைத் தொழிலாளர்கள் போன்ற சுரண்டப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினர் மத்தியில் ஆதித்யா பணியாற்ற முடியும். ஆனால் கேள்வி என்னவென்றால், அவர் கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறாரா என்பதே. சிவசேனா தொண்டர்கள் அமைப்பு மற்றும் அதன் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு இணையானவர்கள். அவர்கள் கட்சிக்கு மிகப்பெரிய சொத்து, ஆனால் அவர்கள் தங்கள் செய்யும் வேலையை ஆதரிக்கும் மற்றும் செய்து முடிக்கும் ஒரு சூழலை உருவாக்கும் தலைவரையும் விரும்புகின்றனர்.

பாஜக என்ன செய்யப்போகிறது?

மகாராஷ்டிரர் அல்லாதவர்கள் மற்றும் வணிக நலன்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்சி என்ற பிம்பத்தைக் கொண்டுள்ள பாஜக என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் உள்ளது. உண்மையில் சிவசேனாவின் இருப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அமைப்பாகவே பாஜக உள்ளது. ஏனெனில் இருகட்சிகளின் வாக்காளர்களும் ஒரே தளத்தை சேர்ந்தவர்கள். இருகட்சிகளும் இந்துத்துவா என்ற பாசறையில் பிறந்து வளர்ந்தவை.

எனவே தாக்கரே குடும்பத்தின் பிடி தளர்ந்துள்ள நிலையில் சிவசேனா ஆதரவாளர்களை வளைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடலாம். சிவசேனாவின் அரசியலின் பிரதானமாக விளங்கும் மராத்தி மனநிலை கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மும்பையில் ஓரங்கட்டப்படுவார்கள் என்ற அச்சமும் தாக்கரே குடும்ப ஆதரவாளர்களிடம் உள்ளது.

உத்தவ் தாக்கரே மற்றும் தேவேந்திர பட்னவிஸ்

சிவசேனாவின் உள்விவகாரங்களில் தாக்கரே குடும்பத்தினர் பிடியை இறுக்கிப் பிடிக்கவில்லை என்றால் அதிருப்தி என்பது கட்சியில் முடிவுக்கு வராது. ஆதித்ய தாக்கரே தனது அரசியலை இன்னும் வேரூன்றி செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

தாக்கரே குடும்பத்தினர் அணுக முடியாதவர்களாகவும், தொண்டர்களை விட்டு விலகியதாகவும், தொண்டர்கள் அணுகுவதைத் தடுக்கும் ஒரு கூட்டத்தால் சூழப்பட்டதாகவும் ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆதித்ய தாக்கரே தனது தாத்தா, மறைந்த சிவசேனா தலைவரான பால் தாக்கரேவைப் போலவே, தொண்டர்களுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும். தனது நெருங்கிய வட்டத்தைத் தாண்டிச் செல்லும் சவாலை எதிர்கொண்டு செயலாற்ற வேண்டும் என சிவசேனா தொண்டர்கள் கோருகின்றனர்.

ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சிவசேனாவில் உருவான தர்பார் அரசியலின் கலாச்சாரத்தை ஆதித்ய தாக்கரே கடக்க வேண்டும். கட்சி அமைப்பு ரீதியில் மீண்டும் வீரியமான செயல்பாடுகள் ஆரம்பித்து இருப்பதை அவர் உடனடியாக உணர்த்த வேண்டிய தேவையும் உள்ளது.

மும்பையைச் சேர்ந்த சிவசேனா மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ‘‘தாக்கரே குடும்பத்தினர் மகாராஷ்டிர அரசில் இருந்து வெளியேறுவது சிவசேனாவின் தொண்டர்கள் மற்றும் அதன் வாக்காளர்களை மீண்டும் அணி திரட்ட உதவும். ஆதித்ய தாக்கரேவுக்கு குறைந்த வயது என்றாலும் அரசு நிர்வாகத்தில் அங்கம் வகித்த அனுபவம் உள்ளது. இது கட்சியில் அவர் இனிமேல் எவ்வாறு செயலாற்ற வேண்டும் என்பதை வழிகாட்டும்’’ என தெரிவித்துள்ளார்.

ஆதித்ய தாக்கரேவை பொறுத்தவரையில் சர்வதேச விவகாரங்களில் ஆர்வம் கொண்டவர். நகர்புறத்தில் வசதியான குடும்ப பின்னணியில் வளர்ந்த அவரது இயல்பு எப்போதும் மேல் நடுத்தர குடும்ப ஈர்ப்பை வெளிப்படுத்தி வந்துள்ளது. மும்பையில் உள்ள செல்வந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களே அவரது நட்பு வட்டம்.

ஆதித்ய தாக்கரே எப்போதுமே பிரிட்டிஷ் அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள். அப்படி எண்ணம் கொண்ட ஒருவர் இந்திய அரசியலை புரிந்து சிவசேனாவின் வேர்களை வளர்ப்பதில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்த வாய்ப்புண்டு? என்ற கேள்வியையும் விமர்சகர்கள் முன் வைக்கின்றனர். இதற்கு காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.