மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ள பாஜக, சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்பார் என தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
முன்னதாக, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவியேற்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.