ராஜஸ்தான் படுகொலை குற்றவாளிகளிக்கு உச்சபட்ச தண்டனை: தையல் கடைக்காரர் குடும்பத்துக்கு முதல்வர் அசோக் கெலாட் உறுதி

ஜெய்ப்பூர்: உதய்பூரில் தையல் கடைக்காரரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உறுதி அளித்துள்ளார். முகமது நபிகள் குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஜ தகவல் தொடர்பாளராக இருந்த  நுபுர் சர்மா கூறியதற்கு உலகளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அவரை ஆதரித்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த டெய்லர் கன்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு வெளியிட்டார். நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். படுகொலை செய்த இருவரும் வெளியிட்ட வீடியோவில் பிரதமர் மோடிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கன்னையாலாலின் செயலை விரும்பாத இருவர் அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட் கன்னையா லால் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு ரூ.51 லட்சம் நிவாரண நிதி வழங்கிய அவர், கன்னையா லால் மகனுக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னையா லாலின் மகன் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அசோக் கெலாட் உறுதி அளித்ததாக கூறினார். படுகொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான இந்த 2 பேருக்கும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்.யுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும் படுகொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.