சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி மற்றும் அவரது இளைய சகோதரர் அனில் ஆகியோர் தங்கள் தாயுடன் ஒரே மும்பை வீட்டில் வசித்து வந்தனர், அவர்கள் தங்கள் தந்தையின் சாம்ராஜ்யத்திற்காக நீதிமன்றங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
இருவரின் தந்தை திருபாய் அம்பானி 2002-ம் ஆண்டில் நிறுவனத்தை வாரிசுகளுக்கு பிரித்துக் கொடுக்காமல் உயில் எழுதி விட்டுச் செல்லாமல் இறந்துவிட்டார். இதனால் ரிலையன்ஸ் குழுமத்தில் சகோதர சண்டை தீராத பிரச்சினைகளை உருவாக்கியது.
கடந்த 2002 இல் திருபாய் அம்பானி காலமான பிறகு முகேஷ் மற்றும் அவரது சகோதரர் அனில் ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். இருப்பினும், சிறிது காலத்திற்குப் பிறகு, சகோதரர்கள் போட்டியிட தாய் செய்த சமரசத்தை ஏற்று ரிலையன்ஸின் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டனர்.
இதன் பிறகு முகேஷ் அம்பானியின் வர்த்தகம் பெருகியது. அம்பானியின் சொத்து மதிப்பு சராசரியாக 104.7 பில்லியன் டாலர் ஆகும். அதேசமயம் அனில் அம்பானி கடன்காரர் ஆனார். அவர் கடனை அடைக்க முடியாமல் தவித்தபோது முகேஷ் அம்பானி உதவிய சம்பவமும் நடந்தது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பெரிய அளவில் ஏறாமல் உச்சம் தொட்டு பின்னர் அப்படியே நிற்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் அவர் தனது தொழிலை வேறு வகையில் விரிவுபடுத்த விரும்புவதாக கூறப்படுகிறது.
அத்துடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை போன்ற சூழல் தனது குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முகேஷ் அம்பானி உறுதியாக இருக்கிறார். இதன் காரணமாக தனது காலத்திலேயே நிறுவனத்தின் பொறுப்புகளை தனது 3 குழந்தைகளுக்கும் பிரித்து கொடுத்து வருகிறார். அத்துடன் அவர்கள் சுயமாக செயல்படும் விதத்தில் நிறுவன பொறுப்புகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார்.
இதன் முன்னோட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் வர்த்தக பிரிவு மகள் இஷா அம்பானி வசம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இரண்டாவது மகன் ஆனந்த் வசம் குடும்பத்தின் பாரம்பரிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் நிர்வாகம் முழுமையாக ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆகாஷ் அம்பானி, வயது 30.
ஆகாஷ் அம்பானி முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆவார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்த ஆகாஷ் 2014 இல் ரிலையன்ஸ் குழுமத்தில் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக சேர்ந்தார்.
400 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுடன் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டராக மாற்றிய உத்தி மற்றும் அதன் வளர்ச்சித் திட்டங்களில் ஆகாஷ் அம்பானியின் பங்கு முக்கியமானது. அவர் இப்போது ஜியோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார். இதுமட்டுமின்றி ஜியோ நிறுவனத்தில் இருந்து முகேஷ் அம்பானி விலகி விட்டார். இதனால் ஜியோ நிறுவனத்தை முழுமையாக வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஆகாஷ் அம்பானி ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆகாஷ் இளமையான அதேசமயம் துடிப்பான கலாச்சாரத்தை ஜியோ நிறுவனத்தில் கொண்டு வர செயலாற்றி வருகிறார். தயாரிப்பு மேம்பாடு மற்றும் பணியாளர் ஈடுபாடு ஆகியவற்றில் தனது முயற்சிகள் பெரும் பயனை தரும் என ஆகாஷ் நம்புகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர், உலகின் பணக்கார கிரிக்கெட் லீக்கான ஐபிஎல்லில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார்.
ரிலையன்ஸ் யூனிட்டான ஜியோ பிளாட்பார்ம்ஸில் மெட்டா பிளாட்பார்ம்ஸ் மூலம் 2020 இல் 5.7 பில்லியன் டாலர் வழங்கிய குழுவிலும் ஆகாஷ் இருந்தார். 2019 பணக்கார வைர வியாபாரியின் மகளான ஸ்லோகா மேத்தாவை மணந்தார். இந்த தம்பதிக்கு அண்மையில் குழந்தை பிறந்தது.
இஷா அம்பானி, வயது 30.
ஆகாஷ் அம்பானியின் இரட்டை குழந்தையாக உடன் பிறந்த சகோதரி இஷா அம்பானி. ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை, இ-காமர்ஸ் பணிகளில் ஈடுபட்டுள்ளார். ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அமேசான் போன்ற ஜாம்பவான்களை போன்று இந்த நிறுவனத்தை ஈ-காமர்ஸ் பிரிவில் விரைவாக விரிவுபடுத்தும் திட்டத்துடன் இஷா களமிறங்கியுள்ளார். அஜியோ இ-காமர்ஸ் பயன்பாடு மற்றும் சிறந்த சர்வதேச பிராண்டுகளுடன் ரிலையன்ஸ் இணைந்து செயலாற்றவும், பேஷனில் ரிலையன்ஸின் செயலாற்றவும் இஷா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இஷா ஸ்டான்போர்டில் வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார். பார்ச்சூன் பத்திரிகை கடந்த ஆண்டு அவரை கடமையின் வாரிசு என்று குறிப்பிட்டு பெருமைபடுத்தியது அவரை இந்தியாவின் 21 வது சக்திவாய்ந்த பெண்மணி என்றும் பார்ச்சூன் பத்திரிகை தரவரிசைப்படுத்தியது.
ஒரு புதிய ரிலையன்ஸ் மால் ஒன்றை உருவாக்குவதில் அவர் தீவிரமாக பணியாற்றுகிறார். 2018-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மற்றும் பார்மா துறையில் தீவிரமாக செயல்படும் கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் ஆனந்த் பிரமாலை இஷா திருமணம் செய்து கொண்டார்.
ஆனந்த் அம்பானி, வயது 27.
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி ஆவார். ஆனந்த் பிரவுன் பல்கலைக்கழகத்தில் 2017 இல் பட்டம் பெற்றார். இவர் அம்பானி குழும முதலீட்டின் முக்கிய பகுதியான எரிசக்தி வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். பசுமை எரிசக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த துறையில் ரிலையன்ஸ் பெரும் திட்டங்களுடன் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் சூரிய எரிசக்தி மற்றும் பச்சை ஹைட்ரஜன் உள்ளிட்ட சுத்தமான எரிசக்தி திட்டங்களை விரிவாக்கி வருகிறது. இதுமட்டுமின்றி எண்ணெய் சுத்திகரிப்பு துறை இன்று பல பிரிவுகளில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே இந்த முக்கிய துறையை கையாளும் பொறுப்பை ஆனந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.