10 வயது சிறுவனுக்காக பூதமாக மாறிய பிரபுதேவா
அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரித்துள்ள படம் மை டியர் பூதம். மஞ்சப்பை மற்றும் கடம்பன் படங்களை இயக்கிய என்.ராகவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடிக்கிறார். ரம்யா நம்பீசன், அஸ்வந்த், ஆலியா, சுரேஷ் மேனன், சம்யுக்தா, இம்மான் அண்ணாச்சி மற்றும் லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார், யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் வெளிவருகிறது.
படம் பற்றி இயக்குனர் என்.ராகவன் கூறியதாவது: குழந்தைகளுக்கான படம் எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குநரின் கனவாக இருக்கும், எனது ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பூதத்துக்கும், பத்து வயதுக் சிறுவனுக்குமான பிணைப்பும், பயணமும்தான் இந்தக் கதையின் முக்கியக் கரு. குழந்தைகளுக்கான பேண்டஸி வகையைச் சேர்ந்த இப்படம் குடும்பப் பார்வையாளர்களால் முழுமையாக ரசிக்கப்படும்.
இந்த படத்தில் கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் சிஜி இருக்கும், இது அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் நகைச்சுவை மற்றும் இதர உணர்வுகள் சரியான கலவையில் இருக்கும். கதாபாத்திரத்திற்காக பிரபுதேவா தன்னை முழுவதுமாக தயார்படுத்தி கொண்டார். அவரது உடல் மொழியிலும் சிரிப்பை வரவழைத்துள்ளார்.
படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் சேனலும், ஓடிடி உரிமையை ஜீ5 தளமும் நல்ல விலைக்கு வாங்கியுள்ளன. படத்தின் வெற்றிக்கு அச்சாரம் போல் இது அமைந்துள்ளது. என்றார் இயக்குனர் என்.ராகவன்.