ரோகித் சர்மா கொரோனவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நாளை தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவரை பரிசோதித்தபோது, இன்னும் கொரோனா தாக்கம் அவருக்கு குறையவில்லை என தெரிய வந்தது.
PC: IANS
எனவே, அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே துணை கேப்டன் கே.எல்.ராகுல் காயத்தால் விலகி விட்டதால், தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
PC: ANI Photo
கடந்த 1987ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. கபில்தேவ் மட்டுமே அந்த சிறப்பை கொண்டிருந்தார். இந்த நிலையில் 28 வயதாகும் பும்ரா கேப்டனாக களமிறங்கினால், 35 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த சிறப்பினை பெறுவார்.
இதற்கு முன்பு எந்த அணிக்கும் பும்ரா கேப்டனாக செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.