மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே குறித்த சுவாரசிய தகவல்களை தற்போது காண்போம்.
288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்றது. எனினும், முதலமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என, சிவசேனா கட்சி பிடிவாதம் பிடித்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாஜக, முதலமைச்சர் பதவியை எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.
இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எடுத்த முயற்சியால், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் – சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தன. எனினும், உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சராக்க சிவசேனா முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டணி கட்சிகள், முதலமைச்சராக, உத்தவ் தாக்கரேவை பதவி ஏற்கும்படி வலியுறுத்தின. இதை கனிவோடு ஏற்றுக் கொண்ட உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநிலத்தின் 19வது முதலமைச்சராக, கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு பதவி ஏற்றார்.
இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை தன் பக்கம் திரட்டிக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியை, நேற்று அதிரடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இன்று, பாஜக ஆதரவுடன், மகாராஷ்டிர மாநிலத்தின் 20வது முதலமைச்சராக, ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றுள்ளார். சிவசேனா தலைமையில் ஆட்சி அமைந்திருந்தாலும், இதை கொண்டாடும் மனநிலையில் உத்தவ் தாக்கரே தற்போதைக்கு இல்லை.
யார் இந்த ஏக்நாத் ஷிண்டே?
மகாராஷ்டிர முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, 1964 ஆம் ஆண்டில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். மும்பையின் தானேவில் அவரது பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பிளஸ் 1 வகுப்பு வரை படித்த ஷிண்டேவால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. குடும்பத்துக்கு உதவும் வகையில் ஆட்டோ ஓட்டத் துவங்கினார். ஆட்டோ டிரைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு, 1980களில் தானே மாவட்ட சிவசேனா தலைவராக இருந்த ஆனந்த் திகேவின் தொடர்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் சிவசேனாவில் சேர்ந்தார். திகேவின் சீடர் என்பதால், கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
கடந்த 1997 ஆம் ஆண்டில் முதல் முதலாக, தானே மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார். பின், 2004 ஆம் ஆண்டு முதல், தானேவில் உள்ள கோப்ரி – பக்பகாடி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார். மாநிலத்தில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், 2014 – 2019 வரை இருந்த பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சியில், ஷிண்டே பொதுப்பணித் துறை அமைச்சராக பணியாற்றினார். உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசிலும், நகர மேம்பாடு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உயர்ந்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே, சாமானியர்களாக இருந்து அரசியலில் சரித்திரம் படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.