அஜித்தின் போட்டோக்கள் வெளியாவதே ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப்தான். அப்படியிருக்க, செல்பேசியில் வாழ்த்தும் தெரிவித்து ஆட்டோகிராஃபும் போட்டுக் கொடுத்ததால் எக்கச்சக்க எனர்ஜியுடன் இருக்கிறார், ஈழத்தமிழர் ரசிகர் லவன்.
அஜித்தின் வாழ்த்து வைரலாகி, ரசிகர் லவன் யாரென்று நெட்டிசன்கள் வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் சூழலில், விகடனுக்காக லவனிடம் பேசினோம். “தேங்க்யூ சார்… நீங்க நல்லாருந்தா போதும் நமக்கு” எப்படி உற்சாகத்துடன் அஜித்தின் வாழ்த்துக்கு பதில் கொடுத்தாரோ, அந்த உற்சாகம் குறையாமலேயே நம்மிடம் பேசத்துவங்கினார் லவன்.
“நான் சின்ன வயசிலிருந்தே அஜித் சாரோட பயங்கர ஃபேன். அவரோட `அமர்க்களம்’ படத்தை அத்தனை தடவைப் பார்த்திருப்பேன். `சத்தம் இல்லாத தனிமையைக் கேட்டேன்’ என்னோட ரிப்பீட் மோட்ஹ பாட்டு. இலங்கையில அஜித் சாரோட எல்லா படமும் வெளியாகிடும். அங்க 100 தியேட்டர் இருக்குன்னா, அதுல 98 தியேட்டர்ல அஜித் சார் படம்தான் ஓடும். ஃப்ரண்ட்ஸோட முதல்நாளே போய் பார்த்துடுவேன். என்னோட கொண்டாட்ட நாளே அவர் படம் ரிலீஸ் ஆகுற அன்னைக்குத்தான். அந்தளவுக்கு அவரைப் பிடிக்கும்.
‘பில்லா’, ‘பில்லா 2’ படத்தையெல்லாம் எத்தனை தடவை பார்த்திருப்பேன்னு சொல்லவே முடியாது. மேக்கிங்கெல்லாம் மிரட்டலா இருக்கும். அவரோட ஸ்டைலிஷான நடிப்பும் நிஜ வாழ்க்கையின் தன்னம்பிக்கையும் எப்பவும் பிரமிப்பையே ஏற்படுத்தும். என்னை மாதிரியான யங்ஸ்டர்ஸுக்கு அஜித் சார்தான் ரோல் மாடல்.
நான் அவரோட வெறித்தனமான ஃபேன்னு ஃப்ரண்ட்ஸ் எல்லோருக்குமே தெரியும். அப்படித்தான், Uk-ல இருக்கிற நண்பர்கிட்ட இருந்து போன் வந்துச்சி. அட்டெண்ட் பண்ணா அஜித் சார். உடம்பெல்லாம் சிலிர்த்துக்கிச்சி. வானத்துல பறக்கிற மாதிரி இருக்குன்னு சொல்வாங்கல்ல… அதை நிஜமாகவே அஜித் சார்கிட்ட பேசும்போது உணர்ந்தேன். அவ்ளோ சந்தோஷம். இப்பவும் அப்படித்தான் இருக்கு. பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிட்டு என்னை மீட் பண்ணுவோம்னு சொன்னார். படத்துல பேசுற மாதிரி அவர் பேசலை. ரொம்ப ஸ்மார்ட்டா கூலா பேசினார்.
எனக்கு அக்டோபர் 10 ஆம் தேதிதான் பிறந்தநாள். முன்கூட்டியே இப்படியொரு சர்ப்ரைஸ் வாழ்த்து கிடைக்கும்னு எதிர்பார்க்கல. அவர், என்கிட்டப் பேசி நாலஞ்சி நாள் இருக்கும். இன்னும் நான் வானத்துலருந்து இறங்கல. பறந்துட்டுதான் இருக்கேன். என் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய சந்தோஷமான விஷயம்னா இதுதான். அவர், ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்த வாழ்த்தை வீட்டுல ஃப்ரேம் போட்டு வைக்கப்போறேன். வீட்டுல மட்டுமில்ல. என் இதயத்திலும்தான்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் லவன்.