பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு இடையே வருகின்ற ஜூலை 11 ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முயற்சி செய்து கொண்டு வருகிறது.
இதற்காக உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவெட் மனுவை தாக்கல் செய்துள்ள ஓபிஎஸ் தரப்பு, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளது.
மேலும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழுக்கு தடை கேட்டு கூடுதலான மனுக்களையும் தாக்கல் செய்துள்ளது.
அதே சமயத்தில் ஒரு கை பார்த்து விடலாம்… என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில், பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்திலும் ஓபிஎஸ் அளித்த புகார் குறித்து விளக்கம் அளித்து மனுவையும் தாக்கல் செய்துள்ளது. இதேபோல் சென்னை உயர்நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவின் பொதுக்குழு வானகரத்தில்தான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை உள் அரங்கில் நடத்தாமல், வெளியில் அரங்கம் அமைத்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு இடம் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் உண்டானது. பின்னர் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு திருப்பமாக உள் அரங்கில் நடத்தாமல் வெளியே அரங்கம் அமைத்து அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.