அன்பானவரை இழந்து வாடுகிறேன் ; தவறான தகவலை பரப்பாதீங்க – மீனா
‛‛என் அன்பான கணவரை இழந்தை வாடுகிறேன். தயவு செய்து தவறான தகவலை பரப்பாதீர்கள்'' என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை மீனா. கடந்த 2009ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த ஐ.டி.,யில் பணிபுரிந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்தார்.
கடந்த ஆண்டு, மீனா மற்றும் அவரது கணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் அவர்கள் மீண்ட நிலையில் வித்தியாசாகர் நுரையீரல் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 28ம் தேதி வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி மறைந்தார். தொடர்ந்து மறுநாள் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வித்யாசாகருக்கு அஞ்சலி செலுத்தி, மீனாவிற்கு ஆறுதல் கூறினர்.
வித்யாசாகர் மறைவு பற்றி பல விதமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மீனா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛என் அன்பான கணவர் வித்யாசாகரை இழந்து வாடுகிறேன். இந்த நேரத்தில் எங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு எங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை பரப்பாதீர்கள். இந்த இக்கட்டான சூழலில் எங்களது துயரத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கடைசி வரை எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட மருத்துவ குழுவினர், முதல்வர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு மீனா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அஞ்சலி
மீனாவின் கணவர் மறைவுயொட்டி தமிழக அமைச்சர் பொன்முடி, மீனாவின் இல்லத்திற்கு சென்று அவரது கணவர் வித்யாசாகரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மீனா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.