பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவஜோத் சிங் சித்துவுடனான உட்கட்சி மோதலின் காரணமாகக் கடந்த ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து புதிய கட்சியைத் தொடங்கி ஊடங்கங்களுக்குப் பேட்டியளித்த அமரீந்தர் சிங், “காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன். ஆனால், பா.ஜ.க-வில் இணைய மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது அமரீந்தர் சிங் விரைவில் பா.ஜ.க-வில் சேர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதுகு அறுவை சிகிச்சை காரணமாக லண்டன் சென்றுள்ள அமரீந்தர் சிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி வழியாக நலம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் தனது கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும், அறுவை சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியதும் அதற்கான நடைமுறைகள் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மற்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்தனர். அவர்களில் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாகரும் ஒருவர். அவரைத் தொடர்ந்து தற்போது அமரீந்தர் சிங் தனது கட்சியை பா.ஜ.க-வுடன் இணைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இன்னும் அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர் பாட்டியாலாவிலிருந்து காங்கிரஸ் எம்.பி-யாகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.