சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி (44th Chess Olympiad – 2022) குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியானது 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். தமிழக முதல்வர் 9.6.2022 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டிட வளாகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக, சர்வதேச அளவில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் 5 மாநகர பேருந்துகளிலும், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு செல்லும் 10 பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன் “நம்ம செஸ், நம்ம பெருமை” – “இது நம்ம சென்னை, நம்ம செஸ்” – “வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு” போன்ற வாசகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கே. கோபால், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா. பொதுத்துறை செயலாளர் டி.ஜகந்நாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் உறுப்பினர் செயலர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.