அனந்தபூர்: ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 11 விவசாய கூலி தொழிலாளர்கள் நேற்று காலை ஒரு ஷேர் ஆட்டோவில் வேலைக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோவின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது. ஆனால், 5 பேர் ஆட்டோவில் உடல் கருகியும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுநர் உட்பட மீதியுள்ள 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக தாடிமர்ரி போலீஸார் மற்றும் மின்சார அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அணில் ஒன்று ஆட்டோ வருவதை கண்டு பயந்துபோய் சாலையில் இருந்து மின் கம்பம் மீது ஏறி அதில் இருந்த இரும்பு கிளாம்பும், மின் கம்பியும் இணையும் இடத்தில் உட்கார்ந்ததால், அந்த கம்பி அறுந்து ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்குவதாகவும் மின் வாரியத்துறை அதிகாரி ஹரிநாராயண ராவ் அறிவித்தார்.