ஆந்திர அரசியலில் குதிக்கிறாரா விஷால்?

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்தவர் என்றாலும் தமிழ் சினிமா மூலம் தான் வளர்ந்தார். இவரது படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பு பெறுகிறது. நேரடி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். விஷால் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். அதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றினார். இந்த வெற்றிகள் கொடுத்த உத்வேகத்தால் அரசியலிலும் குதித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் கைவிட்டுப்போனது, சரியான பின்னணி இல்லாமல் தமிழ்நாட்டு அரசியலில் ஜெயிப்பது கடினம் என்பதை உணர்ந்த விஷால், நடிகை ரோஜா போன்று ஆந்திரா அரசியல் பக்கம் செல்லலாம் என்று நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.

தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. 2024ஆம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலுடன் இணைந்து ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து போட்டியிட உள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு தற்போது எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைத்து அவரை சட்டசபைக்குள் வரவிடாமல் தடுக்க இப்போது வியூகம் அமைத்து வருகிறார். அவற்றில் ஒன்று சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக விஷாலை களம் இறக்குவது. இதுகுறித்து தெலுங்கு மீடியாக்கள் தகவல் வெளியிட்டு வருகிறது.

சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர்.

இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்து விஷாலை பரிந்துரை செய்துள்ளார், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும், அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி.

இதுதவிர விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி சித்தூர் மாவட்டத்தில் தான் கிராணைட் தொழில் நடத்தி வருகிறார். இதன் மூலம் விஷால் அந்த பகுதி மக்களுக்கு நேரடியாக அறிமுகமானவராகவும் இருக்கிறார். இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.