"இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை" – அமர்த்தியா சென் கருத்து

கொல்கத்தா,

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-

“யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என இப்போது கேட்டால், அதற்கு துளி கூட யோசிக்காமல் ஆமாம் என சொல்வேன். நான் அச்சம் கொள்வதற்கு காரணம் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தான் நான் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம்.

நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு அது போதும். வரலாற்று ரீதியாக ஒன்றுபட்ட நம் நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.

வேதங்கள் பற்றிய பொருள் மற்றும் கருத்து விளக்கம் அடங்கிய உபநிடதங்களை உலகிற்கு தெரிய செய்தவர் ஒரு இஸ்லாமிய இளவரசர் தான். முகலாய மன்னர் ஷாஜகானின் மகன் தாரா ஷூகோ, சமஸ்கிருதம் கற்று உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.

இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. இந்தியாவில் பல யுகங்களாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இந்த பிணைப்பை இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச்சாரத்திற்கு உதாரணமாக சொல்ல முடியும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.