இன்று முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக குளிர்பான நிறுவனங்கள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குளிர்பானங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏன் ஜூலை 1ல் இருந்து சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் தடை?

பிளாஸ்டிக் தடை
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலில் 22 பொருட்கள் இருக்கும் நிலையில் அதில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

FMCG பொருட்கள்
பொதுவாக பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை FMCG பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால் இந்த தடை காரணமாக மாற்று வழியை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன

டெட்ரா பேக்
இந்தியாவில் சுமார் 6 பில்லியன் பழச்சாறுகள் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மில்க் ஷேக்குகள், குளிர்பானங்கள் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகி வருகின்றன. டாபர், பார்லே அக்ரோ, கோக்கோ கோலா, பெப்சி, அமுல் போன்ற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் 60 சதவீதத்தை டெட்ரா பேக்கிங்கில் விற்பனை செய்து வருகிறது

பிளாஸ்டிக் ஸ்டிராக்கள்
இந்த நிலையில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நிறுவனங்கள் தங்களுடைய பேக்கிங்கில் வழங்கப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை இனி வழங்க முடியாது.

காகித ஸ்ட்ராக்கள்
பத்து ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படும் பழச்சாறுடன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை வைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் தற்போது பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்களை வழங்க வேண்டிய நிலை உள்ளது.

பிற பொருட்கள்
குளிர்பான நிறுவனங்கள் மட்டுமின்றி காதுக்கு பயன்படுத்தும் இயர் பட்ஸ், பலூன் குச்சிகள், கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், ஒருசில அலங்கார பொருட்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கிளாஸ், பிளாஸ்டிக் ஃபோர்க், ஸ்பூன், கத்திகள், ஸ்ட்ரா உள்பட பல பொருட்கள் இனி பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேசிய மற்றும் மாநில அளவில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த நடவடிக்கையை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என பல்வேறு நிறுவனங்கள் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 2022 ஜூன் 30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்கு மேல் கால அவகாசம் கிடையாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

பாபர் இந்தியா சி.இ.ஓ
இந்த நிலையில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்களை உற்பத்தி செய்வதில் எந்தவித தடையுமில்லை என பாபர் இந்தியாவின் சி.இ.ஓ ஷாருக்கான் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் தற்போது வெளிநாட்டில் இருந்து தான் காகித ஸ்ட்ராக்கள் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தினமும் எங்களுக்கு 12 லட்சம் ஸ்ட்ராக்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்

செலவு அதிகரிப்பு
அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோதி இதுகுறித்து கூறிய போது பிளாஸ்டிக் தடையினால் விற்பனையில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் தற்போது தேவையான அளவுக்கு ஸ்ட்ராக்களை இறக்குமதி செய்து வருகிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் செலவு அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்

விலை உயரும்
தற்போது அனைத்து நிறுவனங்களும் பாக்கெட்டில் ஸ்ட்ராக்களுடன் கூடிய குளிர்பான பொருட்களை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் நிலையில் இனி விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை காரணமாக 10 ரூபாய் குளிர்பானங்களின் விலை ரூ.11 ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FMCG Companies scramble to switch to paper straw for plastic ban from today
FMCG Companies scramble to switch to paper straw for plastic ban from today | இன்று முதல் பிளாஸ்டிக் தடை: அப்ப இந்த பொருட்களின் விலை ஏறுமா?