புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் விவகாரத்துக்கு தூதரக ரீதியிலான நடவடிக்கை, பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை புடினிடம் மோடி வலியுறுத்தினார். மேலும், கடந்தாண்டு டிசம்பரில் புடின் இந்தியா வந்த போது எடுக்கப்பட்ட முடிவுகளின் தற்போதைய நிலை,அவற்றின் செயல்பாடு குறித்தும் மருந்து உற்பத்தி பொருட்கள், வேளாண் விளைபொருட்கள், உரங்கள் ஆகிய துறைகளில் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்தும், சர்வதேச எரிசக்தி, உணவுச் சந்தை ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக பிரதமர் அலுவலகம் கூறி உள்ளது.