புதுடெல்லி: பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
இந்த உரையாடலின் போது, கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தபோது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நிறைவேற்றப்படுவது குறித்து இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, வேளாண் பொருட்கள், உரம், மருந்து பொருட்கள் தொடர்பான இருதரப்பு வர்த்தகத்தை எந்தளவு மேலும் ஊக்குவிப்பது என்பது குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். சர்வதேச எரிசக்தி மற்றும் உணவு சந்தைகளின் நிலைமை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து தலைவர்கள் பேசும் போது, இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை, ராஜதந்திர ரீதியில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதேபோல, பல்வேறு சர்வதேச, இருதரப்பு விவகாரங்கள் குறித்து அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தவும் இரண்டு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.