சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருக்கும் ஸ்ருதி, தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியோஸிஸ் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளில் பிசிஓடியும், எண்டோமெட்ரியோசிஸும் முக்கியமானவை. பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பாதிப்பு, ஹார்மோன் குறைபாட்டால் உண்டாகும் பிரச்னை. இப்பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையற்று வரும்.
எண்டோமெட்ரியோசிஸ் என்பது கர்ப்பப்பை அகப்படலம் என அழைக்கப்படுகிறது. கர்ப்பப்பைக்கு உள்ளே இருக்க வேண்டிய எண்டோமெட்ரிய திசுக்கள், கர்ப்பப்பைக்கு வெளியே வளரும். இதனாலும் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படும்.
இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு கொடுக்கப்படும் முதல் அறிவுரையே உடற்பயிற்சி, எடைக் குறைப்பு, 8 மணி நேர உறக்கம், மனஅழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவைதான்.
இந்நிலையில், ஹார்மோன் பிரச்னைகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக ஸ்ருதி ஹாசன் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “வளர்சிதை மாற்ற பிரச்னைகளை எதிர்கொள்வது என்பது எவ்வளவு சவாலானது என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தபோதும், இதை ஒரு போராட்டமாக நினைக்காமல், இயற்கையான நிகழ்வு என ஏற்றுக்கொள்ளத் தயாராகிவிட்டேன்.
சரியாகச் சாப்பிடுவது, நன்றாகத் தூங்குவது, உடற்பயிற்சி செய்வதற்காக எனக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன். தற்போது என் உடல் சரியாக இல்லை என்றாலும், உள்ளம் சரியாக இருக்கிறது. பிரச்னைகள் என்னை வரையறுக்க விட மாட்டேன். இந்தச் சவால்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான். எனவே, இந்த விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.