உடுமலை: உடுமலை அருகே நாட்டின் முதல்’தென்னை மகத்துவ மையம்’ அமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அணையை ஒட்டி 102 ஏக்கர் பரப்பில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு சொந்தமான, செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணை உள்ளது.
இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் தரமான தென்னங்கன்றுகள், விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
அங்கு குட்டை, நெட்டை ரக, வீரிய ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்து, தர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபின் விவசாயிகளுக்கு வழங்கப்படும். அந்த வகையில், கடந்த 8 ஆண்டுகளில் 8,84,000 கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, தரம் வாய்ந்த 5,54,000 கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலமாக தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநில விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
அகில இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் 2-வது இடமும், உற்பத்தி திறனில் முதலிடமும், சாகுபடி பரப்பில் 3-வது இடமும் வகிப்பதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரியவருகிறது. ச
ர்வதேச அளவிலும், தென்னை உற்பத்தியில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளதால், இந்த மையம் சமீபத்தில் ரூ.3 கோடி மதிப்பில் நாட்டின் முதல் தென்னை மகத்துவமையமாக மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், உழவர் பயிற்சிமையம் மற்றும் நிர்வாக அலுவலகமும் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மையத்தின் மேலாளர் ஜி.ரகோத்தமனிடம் கேட்டபோது, “தென்னை சாகுபடி மற்றும் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தொழில்நுட்பம், தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து மானிய விலையில் வழங்குவது, அறிவியல்ரீதியிலான தொழில்நுட்ப செயல் விளக்கம் அளிப்பது, வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வேளாண் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு, நாட்டில் முதல் முறையாக ‘தென்னைமகத்துவ மையம்’ திறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலான மையமாகவும் மாற வாய்ப்புள்ளது.
சென்னையிலுள்ள மண்டல அலுவலகத்துடன் இணைந்து தென்னை விவசாயிகளுக்காக ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். சிஓடி, எம்ஓடி, எம்ஜிடி, எம்ஒய்டி, ஜிபி உட்பட பல்வேறு ரகங்கள் உற்பத்தியாகின்றன. தேங்காய் மற்றும் இளநீர் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர் உட்பட 37 மாவட்டங்களில் மொத்தம் 4,38,935.20 ஹெக்டேர் தென்னைசாகுபடி பரப்பு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு 11,271 காய்கள் உற்பத்தியாகின்றன. அகில இந்திய அளவில் கேரளா பரப்பளவில் 7,60,000 ஹெக்டேருடன் முதலிடத்தில் உள்ளது.
எனினும் உற்பத்தி திறனில் ஒரு ஹெக்டேருக்கு 9,175 காய்கள் என்ற அளவில் உள்ளது. தமிழகம் பரப்பளவில் 4.38 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்தபோதும், உற்பத்தி திறனில் ஹெக்டேருக்கு 11,271 காய்கள் என்ற அளவில் முதலிடம் பெறுகிறது” என்றார்.