மும்பை: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்ேட முதல்வரான நிலையில், தற்போது எதிர்கட்சியை சேர்ந்த சரத்பவாருக்கு எதிராக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த நிலையில், பாஜக ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏக்நாத் ஷிண்டே முதல்வரான பின்னர், எனக்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2004, 2009, 2014 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் அனுப்பப்பட்ட காதல் கடிதமாகும். ஒன்றிய பாஜக அரசு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி குறிப்பிட்ட நபர்களின் தகவல்களைச் சேகரித்து வருகிறது. பல ஆண்டுகளாக தகவல்களை சேகரிப்பதில் கவனம் செலுத்துவதும், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து தகவல்களை சேகரிப்பதும் ஒரு முதன்மையான திட்டமாக தெரிகிறது’ என்று தெரிவித்தார்.