ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் முழுவதும் விமான பணியாளர்கள் வெகுஜன வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், மக்களின் கோடை விடுமுறை கனவுகள் கனவாகவே போகும் நிலை ஏற்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவிட் தொற்றுநோய தொடங்கியதிலிருந்து ஏற்பட்டுள்ள பணவீக்கம், ஊதிய குறைவுகள் காரணமாக ஊழியர் பற்றாக்குறை, வெகுஜன வேலை நிறுத்தங்களாலும் ஐரோப்பா கண்டம் முழுவதும் உள்ள நாடுகள் பெரும் நெருக்கடியில் போராடி வருகின்றன.
ஐரோப்பா கண்டம் முழுவதும் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக இந்த கோடையில் ஐரோப்பா முழுவதும் விடுமுறைகள் குழப்பத்தில் தள்ளப்படலாம்.
கண்டம் நெருக்கடியில் மூழ்கியுள்ளதால், பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையங்களில் தாமதங்கள், பயணங்கள் ரத்துசெய்தல் மற்றும் சாமான்கள் காணாமல் போனதால், பிரித்தானியாவிற்கு விடுமுறைக்கு வருபவர்கள் சமீபத்திய வாரங்களில் பெரும் சிக்க்கல்கள் எதிர்கொண்டனர்.
ஹீத்ரோவில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் தொழிலாளர்கள் ஊதியம் தொடர்பான சர்ச்சையில் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்ததை அடுத்து மேலும் சிக்கல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
தொற்றுநோய்களின் போது விதிக்கப்பட்ட 10% ஊதியக் குறைப்பை விமான நிறுவனம் மீட்டெடுக்கத் தவறியதால் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் சுமார் 700 தொழிலாளர்கள் வெளியேறுவார்கள் என கூறப்படுகிறது.
ஆனால், இந்த பிரச்சினைகளை பிரித்தானியா மட்டும் எதிர்கொள்ளவில்லை. பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஜேர்மனி, ஸ்காண்டிநேவியா, ருமேனியா, அயர்லாந்து என கண்டத்தின் பல நாடுகளின் நிலைமையும் இதுதான்.
இந்த நாடுகளிலும் தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக வேலைநிறுத்தங்களுக்கு முடிவெடுத்துள்ளனர் அல்லது வேலைநிறுத்தம் குறித்து விவாதித்து வருகின்றனர்.
புக்கரெஸ்ட் மற்றும் போர்ச்சுகல் போன்ற பிற பிரபலமான இடங்களிலும் பணியாளர்கள் பற்றாக்குறையால் தாமதங்கள் மற்றும் லக்கேஜ் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
ஈஸிஜெட் மற்றும் ரியான்ஏர் போன்ற முக்கிய விமான நிறுவனங்களை பாதிக்கும் இடையூறில் ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் பயணிகள் சிக்கிக்கொள்ள உள்ளனர்.
ஸ்பெயினில் உள்ள ஈஸிஜெட் தொழிலாளர்கள் ஜூலை மாதம் 1 முதல் 3, 15 முதல் 17 மற்றும் 29 முதல் 31 வரை மூன்று கட்டங்களாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.
பாரிஸில் உள்ள Charles de Gaulle இல் உள்ள தொழிலாளர்கள் இந்த வார இறுதியில் வெகுஜன வெளிநடப்புக்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மாட்ரிட் மற்றும் ஐபிசா உள்ளிட்ட ஸ்பானிஷ் தளங்களில் உள்ள Ryanair மற்றும் ஈஸிஜெட் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வெகுஜன வேலை நிறுத்தங்கள் ஆயிரக்கணக்கான பயணிகளின் கோடை விடுமுறை கனவை சிதைத்துவிடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.