புதுடெல்லி: எளிதில் தொழில் தொடங்குவதற்கான சூழலைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஆந்திரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் முன்னணி சாதனை மாநிலங்கள் பட்டியலில் இடம் வகிக்கின்றன. வர்த்தகம் மேற்கொள்வதற்கான விதிமுறைகளை எளிதாக்கி, சிறந்த வர்த்தக சூழலை (ஈஸி ஆப் டூயிங் பிஸினஸ்) உருவாக்கியுள்ள மாநிலங்கள் தொடர்பான, ‘மாநில வணிக சீர்த்திருத்த செயல் திட்டம் 2020’ தரவரிசை பட்டியலை ஒன்றிய அரசு நேற்று வெளியிட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020ம் ஆண்டிற்கான தரவரிசைகளை வெளியிட்டார். இதில், 7 முன்னணி சாதனை மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் ஆந்திரா, குஜராத், தெலங்கானா ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன. அரியானா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகியவை சாதனை மாநிலங்கள் பட்டியலில் உள்ள இதர மாநிலங்களாகும். இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகாண்ட், உபி ஆகிய மாநிலங்கள் சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. முன்னேற துடிக்கும் மாநிலங்கள் பட்டியலில் அசாம், கேரளா, கோவா ஆகியவை முக்கிய இடம் பிடித்துள்ளன. சட்டீஸ்கர், கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவை இந்த பட்டியலில் உள்ள இதர மாநிலங்களாகும். தொழில்துறையில் வளர்ந்து வரும் மாநிலங்கள் பட்டியலில் 11 மாநிலங்களும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இந்த பட்டியலில் பீகார், மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, டெல்லி போன்ற மாநிலங்களும், சண்டிகர், அந்தமான் நிகோபார், டாமன் டையூ, தத்ரா நாகர் ஹவேலி, புதுச்சேரி ஆகியவை இடம் பிடித்துள்ளன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை ஒன்றிய அரசு வெளியிடும். ஆனால், இந்த ஆண்டு ஒவ்வொரு பிரிவு வாரியாக தரவரிசையை அரசு வெளியிட்டுள்ளது.