மகாராஷ்டிராவில் திடீரென கடந்த 20-ம் தேதி சிவசேனாவை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனாவில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் குஜராத்திற்கு சென்று அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலம் சென்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்ததால் மாநில ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி உத்தவ் தாக்கரேயிக்கு உத்தரவிட்டார்.
ஆனால் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும் முன்பாக உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இச்சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த பட்னாவிஸ், `முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்பார்’ என்று அறிவித்தார். பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஏக்நாத் ஷிண்டேயை பாஜக ஏன் முதல்வராக்கியது என்று அனைவரது மனதிலும் ஆயிரம் கேள்விகளாக ஓடுகிறது.
அதோடு தேவேந்திர பட்னாவிஸ் தான் அமைச்சரவையில் இடம் பெறமாட்டேன் என்றும் சொன்னார். ஆனால் கட்சி தலைவர்களின் நிர்ப்பந்தம் காரணமாக துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஏன் ஷிண்டேயிக்கு பாஜக பதவியை விட்டுக்கொடுத்தது என்பதற்கான காரணங்கள் தற்போது வெளி வந்துள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பாஜக-வும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து சந்தித்தன. இதில் பாஜக-வை விட சிவசேனா குறைவான இடங்களில் வெற்றி பெற்றபோதும் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று சிவசேனா கோரியது. இதனால் அவசர அவசரமாக 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாருடன் சேர்ந்து கொண்டு அதிகாலையில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியமைத்தார். ஆனால் இந்த அரசு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. இதனால் பாஜக அதிகாரத்திற்கு அலைவதாக மக்கள் மத்தியில் ஒரு வித நெகட்டிவ் கருத்து நிலவியது. எனவே இப்போது முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேயிடம் கொடுத்திருப்பதால் பாஜக அதிகாரத்திற்கு ஆசைப்படவில்லை என்ற ஒரு பெயர் கிடைக்கும்.
அடுத்ததாக முதல்வர் பதவியை இழந்துள்ள உத்தவ் தாக்கரே பாஜக தங்களது முதுகில் குத்திவிட்டதாகவும், பால்தாக்கரே மகனை கவிழ்த்துவிட்டதாகவும் தனது ராஜினாமா உரையில் உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரேயின் உரையால் மக்கள் மத்தியில் தாக்கரே மீது அனுதாபம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அது போன்ற ஒரு அனுதாபம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே ஷிண்டேயை முதல்வராக்கி சிவசேனா தொண்டரை முதல்வராக்கி இருக்கிறோம் என்று பாஜக சொல்லாமல் சொல்லி இருக்கிறது. அதோடு மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே மீதும், அதன் தொண்டர்கள் மீதும் பாஜக இன்னும் நல்ல மரியாதை வைத்திருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ளவும் பாஜக இம்முடிவை எடுத்திருக்கிறது. அதனைத்தான் தேவேந்திர பட்னாவிஸ் தனது உரையில், “ஏக்நாத் ஷிண்டே முதல்வர் இருக்கையில் அமர்ந்திருப்பதன் மூலம் பால்தாக்கரேயின் கனவு நனவாகி இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அதோடு தற்போது சிவசேனாவில் எழுந்துள்ள பிளவால் யார் உண்மையான சிவசேனா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெறுமனே ஆட்சி அதிகாரத்திற்காக ஏக்நாத் ஷிண்டேயை சிவசேனாவில் இருந்து பிரித்து கொண்டு வந்து ஏக்நாத் ஷிண்டேயிக்கு அமைச்சர் பதவியோ அல்லது துணை முதல்வர் பதவியோ கொடுத்தால் சிவசேனா மீண்டும் புத்துயிர் பெற்றுவிடும். இப்போது ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பதால் அவரால் எளிதாக பால்தாக்கரேயின் கொள்கையை முன்னெடுத்து செல்வதோடு உண்மையான சிவசேனா தாங்கள்தான் என்று நிரூபிக்கவும் வசதியாக இருக்கும் என்று பாஜக கருதுகிறது.
இதன் மூலம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சந்திக்க பாஜக-வுக்கு வசதியாக இருக்கும். அதோடு 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருந்தார். இதனால் உத்தவ் தாக்கரேயிடமிருந்து சிவசேனாவை அடியோடு பிடுங்கிவிடவேண்டும் என்ற நோக்கில் தேவேந்திர பட்னாவிஸ் அமைதியாக இருந்து இக்காரியத்தை முடித்துவிட்டு, தான் பதவிக்கு ஆசைப்படுபவன் இல்லை என்பதை காட்டிக்கொள்ள முதல்வர் பதவிகூட வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதோடு ஏக்நாத் ஷிண்டேயிக்கு அதிகப்படியான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சிவசேனா பக்கம் செல்லக்கூடும். அதேசமயம் தங்களது தலைவரே முதல்வராக இருக்கும் பட்சத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா பக்கம் செல்லமாட்டார்கள். இதனை கணக்குப்போட்டுத்தான் பாஜக முதல்வர் பதவி போனாலும் பரவாயில்லை ஆட்சி நம் வசம் இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறதாம்.