கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! – நடிகை மீனா வேண்டுகோள்

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28 அன்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை.

How Actress Meena husband Vidyasagar died at 48 in Chennai

எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி ஜூன் 28 அன்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து ஜூன் 29 அன்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு, பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மீனா, தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், “எனது அன்புக் கணவர் வித்யா சாகரின் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு நான் மனப்பூர்வமாக கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.

image

இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு உதவிய மற்றும் துணை நின்ற அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார் நடிகை மீனா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.