பொலன்னறுவை கந்தக்காடு பகுதியில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்த கைதியின் பெற்றோரும் சகோதரரும் தொமோதராவில் இருந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர். உயிரிழந்தது அவரது குடும்பஸ்தர் இல்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கிய தகவல்களுக்கு அமைய, உயிரிழந்தவர் தெமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ராஜபக்ச எனவும், அவர் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பொலன்னறுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு முன்னர் சடலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த நபரின் பெற்றோர் சடலத்தை தமது பிள்ளையின் அடையாளம் கண்டுகொண்டதுடன், இது சகோதரனுடையது அல்ல என சகோதரர் ஒருவர் கூறியதையடுத்து இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார். பின்னர், இறந்தது தங்கள் மகன்தானா என்பதை உறுதியாக கூற முடியாது என்று பெற்றோரும் தெரிவித்தனர்.
இதன்படி, சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர், உயிரிழந்தது தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த ராஜபக்க்ஷவா என்பதை உறுதிப்படுத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இறந்தது ராஜபக்ச எனப்படுகின்ற கைதியை. அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார். குறி்த்த கைதி தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் நேற்று (30) தப்பியோடிய கைதிகளில் 653 இற்கும் அதிகமானவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
அவர்களில் 261 பேர் நேற்று முன்தினம் (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஏனையோர் நேற்று (30) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதன் பின்னர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் கைது செய்யப்பட்டவர்களில் சோமாவதிய சரணாலயத்தில் மறைந்திருந்த 47 பேர் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கலவரத்தின் போது சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்லாமல் புனர்வாழ்வு நிலையத்திற்குத் திரும்பிய 272 கைதிகள் நேற்று மாலை வரை புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்ததாக மேஜர் ஜெனரல் தர்ஷன் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இங்கு சிறைப்படுத்தப்பட்டிருந்த 997 கைதிகளில் 886 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்களின் ஒரு சிலரே இன்னும் கைது செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பாலானோர் சோமாவதிய சரணாலயத்தில் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவம் மற்றும் ஹிங்குராங்கொட, புலஸ்திபுர மற்றும் பொலன்னறுவை பொலிஸாரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒஷான் ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.
மேலும், தம்பால, சுங்காவில, சோமாவதிய மற்றும் கல்கெட்டிதமன ஆகிய பிரதேசங்களில் கைதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த கைதியின் சடலத்தை தோளில் சுமந்து கொண்டு சுமார் 300 கைதிகள் 20 கிலோ மீற்றர் தூரம் வீதிகளில் பயணித்துள்ளதாகவும், அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண முடியாத நிலையில் சடலத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டு அவர்களும் சரணடைந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலத்தை சுமந்து கொண்டு கந்தகாடுவில் இருந்து சோமாவதிய சரணாலயப் பகுதியிலும் சுமார் 10 கிலோமீற்றர் பயணித்த அவர்கள் பின்னர் சுங்காவிலவில் பகுதியில் நடமாடியுள்ளதாகவும் பொலன்னறுவையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (29) ஏற்பட்ட கலவரத்தில் கல்வீச்சுத் தாக்குதலில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கைதி ஒருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.