கனடாவுக்கு பயணிப்போருக்கு எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
குறைந்தபட்சம், செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை கொரோனா பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி பெறாத பயணிகள் அதற்கான முறையான விதிவிலக்கு பெறாத நிலையில், கனடாவுக்குள் நுழைந்ததும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நிலையில், முதல் நாள் மற்றும் எட்டாவது நாள் கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்படுதல், யாராவது ஒருவரைத் தடுத்து நிறுத்தி, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தல் முதலான நடைமுறைகள் தொடர இருக்கின்றன.
இது குறித்துப் பேசிய கனடா சுகாதாரத்துறை அமைச்சரான Jean-Yves Duclos, கொரோனா காலகட்டம் இன்னமும் முடியவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்றும், இந்த வைரஸிடம் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நம்மால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யவேண்டும் என்றும் கூறினார்.
முன்போல இப்போதும் கனடாவுக்கு பயணிக்கும் அனைவரும், தாங்கள் பயணம் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரத்திற்குள் ArriveCan ஆப் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி தங்கள் பயணம் குறித்த தகவலை வழங்கவேண்டும்.
அத்துடன், பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் மையங்கள் விமான நிலையங்களுக்கு வெளியே அமைக்கப்படுகின்றன. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்து தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த நடைமுறை உதவியாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.