பியோங்யாங்(வடகொரியா),
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியாவையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.கொரிய தீபகற்பத்தில் வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே காலங்காலமாக மோதல் இருந்து வருகிறது.
அங்கு வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு வெளியிடும் கொரோனா பாதிப்பு விவரங்கள், யதார்த்த கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
இந்நிலையில், வடகொரியாவின் குடிமக்களை உஷாராக இருக்குமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தென்கொரியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் இருந்து ‘காற்றில் பறந்துவரும் அன்னிய நாட்டு பொருட்கள்’ மற்றும் பலூன்கள் ஆகியவற்றை கையாள்வதில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் வைரஸை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வருகின்றன. மேலும், காலநிலை மாற்றத்தால், வடக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக, வைரஸ் வடக்கு நோக்கி கொண்டு வரக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரிய விவகாரத்தை கையாண்டு வரும் தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், எல்லை வழியாக அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் மூலம் வைரஸ் வடகொரியாவிற்குள் நுழையக்கூடும் என்ற கூற்றுக்களை மறுத்துள்ளது.
வடகொரியா அரசின் ஊடகமான கேசிஎன்ஏ-இன் கூற்றுப்படி, ஏப்ரல் தொடக்கத்தில் காற்றில் பறந்து வந்த அடையாளம் தெரியாத பொருட்களைத் தொடர்பு கொண்ட 18 வயது சிப்பாய் மற்றும் ஐந்து வயது குழந்தை ஆகியோருக்கு கொரோனா அறிகுறிகள் தோன்றி பாதிக்கப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் கூற்றை நம்புவது கடினம், அறிவியல் ரீதியாகப் பார்த்தால், பொருள்கள் மூலம் வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவாக உள்ளது என்று தென்கொரியாவின் சியோலில் உள்ள வடகொரிய ஆய்வு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யாங் மூ-ஜின் கூறினார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அமலில் இருந்து வந்த தடையை விலக்கி கொண்டுள்ள வடகொரியா, சீனாவுடனான சரக்கு ரெயில் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன் பின்னர் அங்கு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வடகொரியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புக்கு சீனாவை நோக்கி விரல் நீட்டுவது வடகொரியாவுக்கு கடினமான காரியம். அப்படி செய்து மீண்டும் இருநாட்டு வர்த்தக போக்குவரத்தை முடக்கினால் பெரும் இழப்பு ஏற்படும். ஆகவே மறைமுகமாக தென்கொரியாவை குற்றம் சாட்டுகிறது.