குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது மே மாதம் முதல் அதிகரித்து காணப்படும். குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவமழை பெய்யும் என்பதால், குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரிக்கும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குற்றாலம் அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தளர்வுகள் காரணமாக மீண்டும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் மீண்டும் குறிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை குறைந்துள்ளதால் நீர்வரத்து குறைந்ததால் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.