நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிகழ்ந்த சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த முகமது ரபீக் மற்றும் காவலர் அபுதாஹிர் ஆகியோர் இன்று மதியம் கோத்தகிரி பள்ளிவாசலில் தொழுகை செய்துவிட்டு காவல்நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
கேர்ப்பெட்டா, புதூர் இடையே சென்றுகொண்டிருந்தபோது சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணிகளையொட்டி கொட்டப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் இடறிவிட்டதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி முகமது ரபீக் மீது ஏறிச்சென்றதில் அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் சிவராஜை கைது செய்து கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.