புதுடெல்லி: ‘நுபுர் சர்மா சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நாட்டை தீக்கிரையாக்கி விட்டார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது நபிகள் குறித்து பாஜ செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறைகள் ஏற்பட்டன. இதனால், நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தையல் கடைக்காரர் ஒருவர் ராஜஸ்தானில் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், வெளி மாநிலத்தில் உள்ள அனைத்து வழக்கையும் டெல்லிக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த், பர்தீவாலா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கடும் கண்டனத்துடன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நுபுர் சர்மா கூறிய கருத்துக்கள் நாட்டை தீக்கிரையாக்கி விட்டது. அதற்கான அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது? நாட்டில் நடக்கும் பதற்றம் மற்றும் வன்முறை சம்பவங்கள் அனைத்திற்கும் நுபுர் சர்மா மட்டுமே பொறுப்பு ஆவார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல் தொழிலாளியை இருவர் பகிரங்கமாக கொன்றனர். இச்சம்பவத்திற்கு நுபுர் சர்மாவின் பேச்சுகளே காரணம். அவருக்கு ஆதரவாக வெளியாகும் கருத்துகளும், வாதங்களும் வெட்கக்கேடாக உள்ளது. இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு தற்போது நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நுபுர் சர்மா நாடியுள்ளார். மனுதாரர் தரப்பு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா? அல்லது நுபுர் சர்மா ஒட்டுமொத்த நாட்டுக்கும் அச்சுறுத்தலாக உள்ளாரா? என்று நீங்கள் தான் விளக்க வேண்டும். செய்தி தொடர்பாளர் என்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு. அது பொதுமக்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்திவிடக் கூடாது. ஒரு சாதாரண நபர் இதுபோன்ற கருத்தை தெரிவித்து பேசியிருந்தால், அவரை சில மணி நேரத்தில் காவல்துறை கைது செய்து இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் கருத்து தெரித்து வன்முறை சம்பவங்களுக்கு காரணமான நுபுர் சர்மாவை இன்னும் ஏன் டெல்லி காவல்துறை கைது செய்யவில்லை. அவருக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகை? அதனால், தற்போது அவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. நீதிமன்றம் அதனை நிராகரிக்கிறது. நாடு முழுவதும் அவர் மீது தொடரப்பட்ட வழக்கை நுபுர் சர்மா எதிர்கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை அவரது தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாடு முழுவதிலும் தொடரப்பட்ட வழக்கை நுபுர் சர்மா எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.பாஜ அவமானத்தால் தலைகுனிய வேண்டும்காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விடுத்த அறிக்கையில், ‘ஒட்டு மொத்த நாட்டையும் உணர்ச்சிவசப்பட செய்ததற்கு நுபுர்சர்மா ஒருவரே காரணம், அவர் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மிகச்சரியாக சொல்லியிருக்கிறது. இதற்காக, ஆட்சியில் உள்ள பாஜ கட்சி வெட்கித் தலைகுனிய வேண்டும்’ என கூறி உள்ளார்.கருத்துகளை திரும்பப் பெற தலைமை நீதிபதிக்கு கடிதம்தனக்கு எதிராக நீதிபதி சூர்யகாந்த் அமர்வின் உத்தரவில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் திரும்பப் பெற வேண்டுமென கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு நுபுர் சர்மா தரப்பில் நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.