சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடும் வகையில்

ஜூன் 30, 2022 அன்று, தேசிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் பாராளுமன்றத்தின் பங்கை அங்கீகரிக்கும் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடுகின்றோம்.

இந்த நாள் முதன்முதலில் ஐ.நா பொதுச் சபையால் 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது, இது தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பின் (I.P.U) 129 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. 1889 ஆம் ஆண்டில் இதே தினத்தில் முதன்முதலில் நிறுவப்பட்ட I.P.U ஆனது, ‘ஜனநாயக ஆட்சி, மனித பிரதிநிதித்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஒரு சமூகத்தின் சிவில் அபிலாஷைகளை’ மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.

இந்தத் தினமானது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தரநிலையாக பாராளுமன்ற ஜனநாயகத்தின் தனித்துவமான மற்றும் நீடித்த அமைப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு, 2021 இல், இந்தத் தினத்தில் பாராளுமன்றமானது “இளைஞர் வலுவூட்டல்” மீது கவனம் செலுத்தியது, அதேசமயம் 2022 ஆம் ஆண்டின் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தின் கருப்பொருள் “பொதுமக்கள் ஈடுபாடு” என்பதாகும். வெளிப்படையாக, ‘பார்லிமென்ட்’ என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான ‘பார்லர்’ என்பதிலிருந்து உருவானது, அதாவது ‘பேசுவது’ என்று பொருட்படுகின்றது. இவ்வாறு, பொது உரையாடல் மற்றும் ஈடுபாடு ஆகியவை பாராளுமன்ற ஆட்சி முறையின் அடித்தளத்தை அமைக்கின்றன.

ஜனநாயக செயற்பாட்டில் பொதுமக்களின் ஈடுபாடு எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருக்கும் ஒரு தருணத்தில், சர்வதேச பாராளுமன்ற தினத்திற்கான கருப்பொருள் சமூகத்தில் தற்போதைய ஜனநாயக மற்றும் பொருளாதார உரையாடலுக்கு மிகவும் பொருத்தமானது.

“பாராளுமன்ற முறைமையானது மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, பாராளுமன்ற முறைமையின் வெற்றியானது ஜனநாயக செயற்பாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதையும், அத்தகைய பொது ஈடுபாட்டிற்கு பாராளுமன்ற அமைப்பானது எவ்வளவு சிறப்பாக பதிலளிக்கின்றது என்பதையும் பொறுத்தது.” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.

“இலங்கைப் பாராளுமன்றத்தின் மீதும், மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மறந்துவிடக் கூடாது. இலங்கைப் பாராளுமன்றமானது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றைத் திறம்பட உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டது என்ற வலுவான வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதன் முக்கிய நோக்கங்கள்: அனைத்து மக்களுக்கும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்துதல். அந்த முடிவை அடைந்து கொள்வதற்கு, நாம் பொது உரையாடல் மற்றும் ஈடுபாட்டைப் பயன்படுத்த வேண்டும்.”, என்றார் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. கலாநிதி. ஹரிணி அமரசூரிய.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. திருமதி மஞ்சுளா திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “திறமையுடனும் வெற்றியுடனும் இருக்க, பாராளுமன்ற அமைப்பு பொதுமக்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்க வேண்டும், மேலும் பொது மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் மற்றும் அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

எந்தவொரு ஜனநாயகத்தினதும் அடிப்படையாகப் பாராளுமன்றம் உள்ளது. எனவே குரல் அற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் அதன் அடிப்படை வகிபங்கை அது நிறைவேற்ற வேண்டும். நாட்டினுடைய முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நிலையான மற்றும் முக்கியமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதல், இயற்றுதல், மற்றும் அவை செயற்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல் ஆகியவை பாராளுமன்றத்தின் முக்கிய பொறுப்புகளில் அடங்கும். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது அரசாங்கத்தையோ பொறுப்புக்கூற வைக்க வேண்டிய கடமையும் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அதன்படி, பொதுமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிறைவேற்று அதிகாரி வைத்திருக்கும் அதிகாரத்தை “சமநிலைப்படுத்த” ஒரு “சரிபார்ப்பாகவும்” செயல்படும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும். அரசாங்க செலவினங்களுக்கான வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பை பாராளுமன்றம் கொண்டிருப்பதால், அரசாங்க செலவினங்களில் “சரிபார்ப்புக்கள்” மற்றும் “சமநிலைப்படுத்தல்கள்” என்பவற்றைப் பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறாக, இந்த பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கை பாராளுமன்றம் அத்தகைய பாத்திரங்களையும் பொறுப்புகளையும் ஆற்றுவதற்கும், திறம்பட நிறைவேற்றுவதற்கும் ஒரு முக்கிய வகிபங்கினைக் கொண்டுள்ளது. அதை அர்த்தமுள்ள வகையில் செய்ய, பொது மக்கள் ஈடுபாடு அவசியமானதாகும்.

“பாராளுமன்ற அமைப்பு ஒன்றின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை நினைவுகூருவதற்கு இந்த நாளை நாம் ஒரு சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும் என்று நான் நம்புகின்றேன். பொதுச் சொற்பொழிவுகளால் பெறப்பட்ட கருத்துக்களைப் பயன்படுத்தி பாராளுமன்றம் சுய மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு செயன்முறையை உணர்ந்து கொள்வதற்கான உரையாடலைத் தொடங்குவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்குப் பங்கு உள்ளது என்பதை அது அங்கீகரிக்கின்றது. இது பாராளுமன்றம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கும், சவால்களை அடையாளங் கண்டு, மக்களின் குரல்களின் பிரதிநிதியாக இருக்க, அத்தகைய சவால்களை சமாளிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பதற்கும் இது இன்றியமையாததாக இருக்கும்” என்றார் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே.

“நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது, எமது பாராளுமன்ற முறைமை அதன் நோக்கத்தை உணரத் தவறினால், எமது பாராளுமன்றத்தின் நடைமுறைகளை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, இலங்கைப் பாராளுமன்றத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு பயனுள்ள மூலோபாயத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தினம் பயன்படுத்தப்படும் என நான் நம்புகின்றேன்.” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. தலதா அத்துகோரள தெரிவித்தார்.

திருமதி டயானா கமகே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கூறுகையில், “இந்த தினத்தில், இலங்கை மக்களுக்கு, குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு குரல் கொடுப்பதாகவும், நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் தற்போதைய தேவைகளைப் பிரதிபலிக்கும் பொறிமுறைகளை உருவாக்குவதிலும், மற்றும் சட்டங்களை வகுப்பதிலும் எனது பங்கை ஆற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.

பாராளுமன்றமானது செயற்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இலங்கையில், அரசியற் பிரதிநிதித்துவத்தின் தரத்தை, அதாவது பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளையும் விட்டுவிடாது, அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த இலக்கை நனவாக்குவோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.