மகாகவி பாரதியார்:
மக்கள் மனதில் இன்றுவரை வேறூன்றி நிற்கும் புகழ்பெற்ற கவிஞர். பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு தனது பேனா மூலம் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளர். பெண் அடிமைத்தனம், ஜாதி கொடுமைகள் போன்றவற்றிற்கு இறுதிவரை எதிர்த்து நின்றவர் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு…!!
பிறப்பு :
மகாகவி சுப்ரமணிய பாரதியார் 1882ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார்.
கல்வி :
ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும் பொழுது கவிதைகள் எழுத தொடங்கினார். தன்னுடைய பதினொரு வயதில் கவிப்பாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார். திருநெல்வேலியில் உள்ள இந்து கல்லூரியில் ஆரம்பக்கல்வியை படித்த பாரதியார். பின் ஆங்கிலமும், கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு சென்று கல்வி பயின்றார் பாரதியார். பள்ளிபடிப்பை முடித்து எட்டயபுரம் வந்த பாரதியார் 1902ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டு காலத்திற்கு எட்டயபுரம் மன்னருக்கு அரசவை கவிஞராக பணியாற்றினார்.
திருமண வாழ்க்கை :
பாரதியாருக்கு 1897ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி செல்லம்மாவோடு திருமணம் நடந்தது.
இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார்pன் பங்கு :
தன்னுடைய தீராத சுதந்திர தாகத்தை தணிக்க 1905ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டினார் மகாகவி பாரதியார். அதன்பிறகு கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
1906ல் சென்னையிலிருந்து ‘இந்தியா” என்ற வாரப் பத்திரிக்கை துவங்கி அதன்மூலம் தனது அரசியல் கருத்துக்களை நாட்டு மக்களிடம் பரப்பினார். 1907ஆம் ஆண்டில் ‘பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார் பாரதியார்.
இந்திய விடுதலை போராட்டத்தில் பாரதியார் தீவிரமாக ஈடுபட துவங்கினார். தான் ஆசிரியராக இருந்த இந்தியா என்னும் பத்திரிக்கையை விடுதலைக்காக பயன்படுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில், பாரதியாரின் பாடல்கள் காட்டுத்தீயாய் பரவி தமிழர்களை வீறுகொள்ள செய்தது.
பாரதியாரின் சுதந்திர எழுச்சிமிக்க பாடல்களும், கேலி சித்திரங்களும் சுதந்திர போராட்டத்திற்கு கைகொடுத்து வழிநடத்தியது. ‘இந்தியா” பத்திரிக்கையின் சட்ட ரீதியான ஆசிரியர் கைது செய்யப்பட்டு பாரதியார் மீது பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதனால் தன் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரியில் தலைமறைவாக வாழ்ந்தார் பாரதியார். அவ்வாறு வாழ்ந்த போதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம் போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைகளை எழுதினார். அதோடு 1912ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டார் பாரதியார்.
பாரதியாரின் மறைவு :
1921ஆம் ஆண்டு ஜூலை மாதம், தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதியார். அங்கு யாரும் எதிர்பாராத விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எரிந்தது. அதனால் தலையிலும், கையிலும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. அதோடு அவருக்கு இது ஒரு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் நோய்வாய்ப்பட்டார்.
சில நாட்களுக்கு பிறகு அவர் யானை தந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டபோதும் வயிற்று கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருந்துகளை சாப்பிட மறுத்த அவர் தனது 39வது வயதில், 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.