சீனாவுடன், ஹாங்காங் இணைந்து 25 ஆண்டுகள் முடிவடைவதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் விழா நடைபெறுகிறது. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் ஹாங்காங் நிர்வாக தலைவராக ஜான் லீ பதவி ஏற்றுக் கொண்டார்.
நிகழ்வில் ஜி ஜின்பிங் பேசியதாவது, “சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது. ஹாங்காங் என்றுமே என் மனதில் இருக்கும். தங்கள் தாய் நாட்டுடன் ஹாங்காங் இணைந்த பிறகு ஹாங்காங் மக்கள் தலைவர்களாகிவிட்டார்கள். பல குழப்பங்களுக்கும் பிறகும் ஹாங்காங்கை கீழ விழ வைக்க முடியாது என்பதை சிலர் வலியுடன் புரிந்து கொண்டிருக்கிறார்கள். நான் ஹாங்காங்கின் வளர்ச்சியிலேயே நோக்கம் கொண்டுள்ளேன். ஹாங்காங் பல சவால்களையும் மீறி உயிர் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
5 வருடங்களுக்குப் பிறகு ஹாங்கிற்கு ஜி ஜின்பிங் பயணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயணம் காரணமாக ஹாங்காங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். எனினும் தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகவே ஹாங்காங் உள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையைச் சந்திக்க வைக்க, கைதிகள் பரிமாற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. சீனாவின் நெருக்கடியால் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுவதாக லட்சக்கணக்கான ஹாங்காங் மக்கள் பல மாதங்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தை ஒடுக்க சீனா தனது படையை ஹாங்காங்கில் களமிறக்கியது. இதையடுத்து ஹாங்காங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.