மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவர் வழுதலைகுடியைச் சேர்ந்த சோலையம்மாள், அவரின் மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரிடம் கடந்த 2019 -ம் ஆண்டு ரூ. 3 லட்சம் கடன் பெற்றதற்காக, வீட்டை அடமானமாக கிரய பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் வாசுதேவன் அசல், வட்டி என ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தும், அதனையும்மீறி ரூ. 7 லட்சம் கொடுத்தால்தான் பத்திரப்பதிவை ரத்து செய்து தருவேன் என சோலையம்மாள், ஜெயவீரபாண்டி இருவரும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த வாசுதேவன் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீஸார் சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து அவரின் வீட்டை சோதனை செய்வதற்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சோலையம்மாள் வீட்டில் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பலருக்கு கடன் கொடுத்த வகையில் அடமானமாக கிரயம் பெற்ற 30 பத்திரங்கள், வெறும் கையெழுத்து மட்டும் பெற்ற 11 பத்திரங்கள் என ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கந்துவட்டி வழக்கில் சோலையம்மாள், மகன் ஜெயவீரபாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.