`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து

“இந்தியாவில் சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட நாளும் ஒரு முக்கியமான தினம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் 5வது தேசிய ஜி.எஸ்.டி தின விழா, ஜி.எஸ்.டி கவுன்சில் சார்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு – புதுச்சேரி சரக்கு மற்றும் சேவை வரிக்கான தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சௌத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பாக பங்களிப்பு செய்த நிறுவனங்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “இந்த நாள் நமது நாட்டின் மிக முக்கியமான ஒரு நாளாகும். சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்று, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட தினம் மிகவும் முக்கியமான ஒன்று.
image
அதேபோல் `ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்பது நமது அரசியலமைப்பிலேயே உள்ளது. இந்தியாவில் கூட்டாட்சி பற்றி பேசுவது மிகவும் முக்கியமென்றாலும், இந்திய நாடு மிக நீண்ட வருடத்திற்கு முன்பே பிறந்துவிட்டது என்பதையும் நான் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது இந்த நாடு பல மாநிலமாக பிரிந்திருந்தது. மேலும் அப்போது நம் முன்னோர்களின் பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் வேறுபட்டது. அந்தவகையில் இந்த நாடு ஒரு அகண்ட பாரதம். அதேநேரம் பாரதம் என்பது ஒன்றே. பாரதத்தில் பல மொழி கலாச்சாரம் உள்ளது. அதுவே பாரதத்தின் அழகு” என்றார்.
மேலும் பேசுகையில், “மகாகவி பாரதியார், விவேகானந்தர் உள்ளிட்டோரின் கருத்துக்களும் ஒரே பாரதம் என்கிற வகையில் தான் இருக்கும். சர்தார் பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க முயற்சி செய்தாரோ, அதே போல தான் ஜி.எஸ்.டி மூலம் ஒரே நாடு, ஒரே வரி என்பதன் வாயிலாக ஒன்று இணைகிறது.
image
ஜி.எஸ்.டி மக்களுக்கு, வியாபாரிகளுக்கு எளிமையாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 வருடத்தில் ஜி.எஸ்.டி மூலம் 35 கோடி முதல் 1500 கோடி வரை லாபம் அதிகரித்து உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த 25 வருடத்தில் உலக அரங்கில் இந்திய பலமான நாடாக இருக்கும்” என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.