சென்னையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழக முழுவதும் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூன்று பேரை போலீசார் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து பைசல், ஜகருல்லா, உதயசீலன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 600க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போதை ஊசி சிரிஞ்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.