சென்னை, கொரட்டூர் பாலாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சக்தியேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் இருவருமே, அந்தப் பகுதியில் இயங்கிவரும் ஓர் தனியார் மழலையர் பள்ளியில் பயின்றுவருகிறார்கள். இந்நிலையில், இன்று பிற்பகல் 3:30-க்கு நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் செல்லும்போது, குழந்தையின் இடது காலில் பிரம்பால் அடித்த தடம் இருந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், இது குறித்து கொரட்டூர் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “இன்று 01.07.2022, காலை 10:30 மணிக்கு நான்காம் வகுப்பு படிக்கும் என் மகளை வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று, வகுப்பு ஆசிரியை பார்வதி கால்களிலும், கைகளிலும் பிரம்பால் கடுமையாகத் தாக்கியுள்ளார். அதனால், அடித்த ஆசிரியை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை அடுத்து, காவல்துறையினர், மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், ஆசிரியர் தன் செயலுக்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் ஆசிரியரிடம் இனி இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் வழங்கிய புகார் மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் பேசினோம். “வீட்டுப்பாடம் எழுதாத காரணத்துக்காக ஆசிரியை என் மகளைச் சரமாரியாக அடித்த காரணத்துக்காகக் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். அந்த ஆசிரியை செய்தது தவறு என்று மன்னிப்பு கோரியுள்ளார். ஆசிரியையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியம். அதனால், நான் புகாரை திரும்பப்பெற்றுள்ளேன்” என்று தெரிவித்தார்.