சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜூலை 4-ம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதேநேரம் ஜூலை 11-ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை கோரும் கோரிக்கையை இந்த அவமதிப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. முன்னதாக, இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி, சண்முகம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர, வேறு எந்தவொரு புதிய தீர்மானங்களையும் நிறைவேற்றக் கூடாது. கட்சி விதிகளை திருத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கும் வகையில் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாகவும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து இருப்பதே செல்லாது எனும்போது, அவர் தலைமையில் ஜூலை 11-ல் பொதுக்குழுவை நடத்த முடியாது என்பதால் அந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி சண்முகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களான சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி மற்றும் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்றும், தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக பதவியில் தொடர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழுவை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்தே அறிவிக்க முடியும் என அதில் கூறப்பட் டுள்ளது.
நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனுதாரரான சண்முகம் தரப்பில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சி.திருமாறன் நேற்று ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4-ம் தேதி விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஜூலை 11-ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவுக்கு தடைகோரி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை இந்த அவமதிப்பு வழக்குடன் சேர்த்து விசாரிக்க இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.