ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு அதனுள் நுழைந்து பார்த்தனர். அங்கே நீர் நிறைந்த குளங்கள், மாளிகைகள், கோபுரங்கள் இருந்ததையும், குளத்தின் அருகே சுயம்பிரபை என்ற பெண் தவத்தில் இருப்பதையும் கண்டனர். (இந்தக் குகையையும் குளத்தையும் இப்போதும் பார்க்கலாம்) சுயம்பிரபையை கண்ட ஆஞ்சநேயர் அவளை வணங்கி, தாங்கள் யார்? என்று கேட்கிறார். அதற்கு சுயம்பிரபை முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இந்த பகுதியில் அழகிய ஊரை அமைத்தான்.

ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்றான். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் வாழ்ந்து வந்தான். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனை கொன்றுவிட்டான். கொலைப்பாவத்தால் சிரமப்பட்ட இந்திரனைக் காக்க தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனின் ஆணைப்படி கங்கை இந்த குகைக்குள் வர அதில் குளித்து தன் பிரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் போக்கி கொண்டான். அன்றிலிருந்து இந்த குளத்தை நான் காத்து வருகிறேன். அத்துடன் ராமதூதன் அனுமன் இப்பகுதி வரும் போது அவனிடம் ஒப்படைத்து விட்டு நீ தேவலோகம் வந்து விடலாம் என்று பிரம்மன் கூறினார்.

எனவே “இன்று முதல் இந்த தீர்த்தத்தை நீ பாதுகாத்து வரவேண்டும். நான் தேவலோகம் செல்கிறேன்” என்றாள் சுயம்பிரபை. ஆனால் அனுமனோ, “தாயே, சீதா தேவியை ராமருடன் சேர்த்து வைக்காமல் நாங்கள் எங்கும் தங்க மாட்டோம். மேலும் ராமர் பட்டாபிஷேகம் முடிந்த பின் இங்கு வந்து தங்குகிறேன்” என்று கூறி விடைபெற்று சென்றார். இலங்கையில் வெற்றி கண்ட ராமர் சீதையுடன் புஷ்பவிமானத்தில் அயோத்தி திரும்புகிறார். அப்போது இத்தலத்தில் வசிக்கும் சுயம்பிரபை பற்றியும், அவள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் தீர்த்தத்தைப்பற்றியும் ராமரிடம் ஆஞ்சநேயர் எடுத்துக் கூறினார். அனுமன் கூறியதைக்கேட்ட ராமரும், “ஆஞ்சநேயா, பட்டாபிஷேகம் முடிந்தவுடன் அவசியம் இத்தலத்திற்கு வருவோம்” என்றார். ராமர் பிரதிஷ்டை செய்த அனுமன் பட்டாபிஷேகமும் சிறப்பாக நடந்தது. ஒரு சுபமுகூர்த்த நாளில் ஆஞ்சநேயரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணாபுரம் வந்தார் ராமர். ஆஞ்சநேயரை யந்திரங்கள் எழுதச்செய்து, தானே யாகம் வளர்த்து அனுமனை பிரதிஷ்டை செய்து, நீ இங்கேயே தங்கி உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார் ராமர்.

எந்த இடத்தில் ராமரின் திருநாமம் ஒலிக்கிறதோ அந்த இடங்களில் எல்லாம் அனுமான் நிச்சயம் இருப்பார். அதே போல் அனுமன் நாமம் ஒலிக்கின்ற இடங்களில் ராமபிரான் இல்லாமலா போய் விடுவார். இதனால் தான் இக்கோவிலில் ராமச்சந்திர மூர்த்தி, சீதை, லட்சுமணன், அனுமாரோடு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். ராமனின் அடுத்த அவதாரமாகிய கிருஷ்ணனுக்கும், அனுமனுடன் தொடர்பு இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே ஆஞ்சநேயர் கோவில் இருக்கும் பகுதி கிருஷ்ணாபுரம் எனப்பட்டது.

தெற்கு நோக்கிய சன்னிதியில் ஶ்ரீ ஆஞ்சநேயரும் தெற்கு நோக்கியுள்ளார். பூமிக்கு மேல் சுமார் ஆறு அடி உயரத்தில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது ஶ்ரீ ஆஞ்சநேயரின் சிலாரூபம். அந்த பாறை பூமியினுள் மிகுந்த ஆழம் வரை செல்கிறது. அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் “அபய முத்திரை” காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், நேர் கொண்ட பார்வையில் – ஒளிர் விடும் பிரகாசம், கூடவே ஒளிர் விடும் காருண்யம் – இதனை காண கண் ஆயிரம் வேண்டும்.

மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.