தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு என்ற அந்த புராதன பைபிள், தற்போது லண்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் என்பவர், நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்டிருந்தார். சுமார்  300 வருட பழமை யான புராதன  தமிழ் பைபிள் தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த பைபிள் கடந்த 2005ம் ஆண்டு காணாமல் போனது.

பழமை வாய்ந்த இந்த பைபிளை கண்டுபிடிக்க வேண்டும் என்று சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த  2017ம் ஆண்டு வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் புகார் அளித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதைத்தொடர்ந்து திருடு போன பைபிள் குறித்து சிலை கடத்தல் தடுப்பு துறையில் விசாரணை நடத்தி வந்தனர். அதில், தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள புராதன பொருட்களின்  மியூசியங்கள், ஏலம் விடும் நிறுவனம் தொடர்பான  இணையதளங்களை ஆய்வு மேற் கொண்டதில், தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன பழமையான  பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது.  இது லண்டனில் உள்ள கிங்ஸ் கலெக்ஷன்ஸில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தமிழக காவல்துறையின் சிலை பிரிவு சிஐடி தெரிவித்துள்ளது

இதையடுத்து, அந்த பைபிளை, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம்  லண்டனில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பைபிளை திருடிச் சென்றது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.