சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக் கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
3, 4-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.