சென்னை: அரசுப் பள்ளி மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் 2019-ம்ஆண்டு தொடங்கப்பட்டன. ஆசிரியர் பற்றாக்குறையால் இந்த மழலையர் வகுப்புகள் அங்கன்வாடிகளுக்கு மாற்றப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தன. இதையடுத்து, ‘‘அரசுப் பள்ளிகளிலேயே மழலையர் வகுப்புகள் தொடர்ந்து இயங்கும். இதற்கு தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இந்நிலையில், மழலையர் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள தொடக்கக்கல்வித் துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
2,381 அரசுப் பள்ளி வளாகங்களில் இயங்கும் அங்கன்வாடி மழலையர் வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும். ஒருமையத்துக்கு ஒருவர் வீதம் 2,381 சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதுவரை அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளரைக் கொண்டு சேர்க்கை பணியை மேற்கொள்ள வேண்டும்.அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வளங்களைக் கொண்டு கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் செயல்படும் நேரங்களில் மட்டுமேமழலையர் வகுப்புகள் செயல்படும். குழந்தைகளின் பாதுகாப்பு முழுவதும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர்களையே சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.